For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபாகரனின் மகள் என்ற பெயரில் வெளியான வீடியோ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை!

12:19 PM Dec 02, 2023 IST | Web Editor
பிரபாகரனின் மகள் என்ற பெயரில் வெளியான வீடியோ  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை
Advertisement

துவாரகா பெயரில் வெளி வந்த காணொலியை நிராகரிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், தனி தமிழீழம் கேட்டு போராடி உயிர் நீத்தவர் மாவீரன் பிரபாகரன். இலங்கை அரசால் கடந்த 2009-ம் ஆண்டு பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.  அப்போது முதல் தற்போது வரை பலரும் பிரபாகரன் உயிரோடு உள்ளார்,  அவருடன் பேசிவருகிறோம் என்று பலரும் பல்வேறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். 

ஆண்டுதோறும் பிரபாகரன் பிறந்த நாளுக்கு அடுத்த நாளான நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் தமிழ்நாடு உள்ளிட்ட உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாளாக அனுசரித்தனர். ஆனால் இந்த ஆண்டு எல்டிடிஇ தலைவரின் மகள் துவாரகா என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அது உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகாவா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. பலரும் இது பிரபாகரன் மகள் தான் எனவும், துவாரகா இல்லை எனவும், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ எனவும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் துவாரகா பெயரில் வெளி வந்த காணொலியை நிராகரிக்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

“துவாரகா பெயரில் வெளிவந்த காணொளியை நிராகரிக்கிறோம்! தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது.

கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள் எனவேதான் அவரது மகளாக வேறு ஒருவரை முன்வைப்பது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ்மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது. இதே வேளை இவ்விவகாரத்தினை பேசுபொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். விழிப்பே அரசியலின் முதற்படி' என்ற தமிழீழத் தேசியத் தலைவரது வாக்கை நாம் அனைவரும் நினைவிருத்தி, தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுவோம்
நன்றி. தமிழர் தலைவிதி தமிழர் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.” 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement