“2026ல் அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும்” - வேலூரில் இபிஎஸ் பேச்சு!
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மண்டல மாநாடு இன்று (பிப்.16) நடைபெற்றது.இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.
எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது,
“கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புகின்ற கூட்டம் இது. வேலூர் கோட்டையில் இருக்கும் நமது இளைஞர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். 234 தொகுதிகளையும் வென்று ஆட்சியை நிறுவ என் முன் இளைஞர்கள் கூடியுள்ளனர்.
முதலமைச்சர் தன்னை அனைவரும் அப்பா என்று சொல்கிறார்கள் என்கிறார். தமிழ்நாட்டு குழந்தைகளும் பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அப்பா என்று கதறும் சத்தம் முதலமைச்சருக்கு கேட்கவில்லையா? அதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்?
இந்தாண்டு ஜனவரி முதல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் முதலமைச்சரின் காதிற்கு எட்டவில்லையா? அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி go back என்றார். இப்போது welcome to என்று வெள்ளை கொடி பிடிக்கிறார்.
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி சிதறி வருகிறது. ஏனென்றால் அக்கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் கூட்டணியை நேசிப்பதில்லை. திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஒருபக்கம் இந்தியா கூட்டணி, மறுபக்கம் பாஜக அமைச்சரை அழைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் என்று முதலமைச்சர் கூறுகிறார். அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் வரும்போது கூட்டணி வைப்போம். ஏனென்றால் கூட்டணி வேறு கொள்கை வேறு. ஆனால் திமுக அதிகாரத்திற்கு வர கூட்டணியை விட்டுக்கொடுக்கிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும். அனைவரின் கோரிக்கையை ஏற்று 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும். மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பது சரியல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இரு மொழிக் கொள்கைதான் அதிமுக கடைபிடிக்கும்.
39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்கள் திமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை கொண்டு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுங்கள்.
மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நீட்தேர்வு ரத்து செய்வதற்கு ரகசியம் இருக்கிறது என தெரிவித்த முதலமைச்சரால் அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீட் தேர்வை தங்களால் ரத்து செய்ய முடியாது என அவர் கைவிரித்து விட்டார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் நானும் ஒருவன். அதிமுக விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து இட ஒதுக்கீடு வழங்கியது . திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து பகுதிகளிலும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்களில் விற்பனை. அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புழக்கம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று தமிழ்நாடு போதைப்பொருட்கள் மிகுந்த மாநிலமாக உள்ளது. காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை. தேர்தலில் 525 வாக்குறுதிகள் தந்தார்கள் ஆனால் 15 சதவிகித வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற வில்லை. 5,00,000 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை எப்போது நிறைவேற்ற போகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு நன்றாக கிடைக்கும். தமிழ்நாட்டின் வருவாய் எங்கே போனது? ரூ. 3,00,000 கோடி கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற சாதனையை முதலமைச்சர் படைத்துள்ளார்”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.