மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 12176 காளைகளும் 4514 வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார்.
இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடு பிடி வீரர்களுக்குகென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் ஜன.10-ம் தேதி முதல் இன்று (ஜன.11) பிற்பகல் 12மணி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நேற்று (ஜன. 10) பிற்பகல் 12 மணி முதல் முன்பதிவு செய்வதற்கான தளம் செயல்பட ஆரம்பித்த நிலையில், பதிவு செய்வதற்கான காலம் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கையை வெளியிட்டார்.
அதன்படி மொத்தமாக 12176 காளைகளும், 4514 வீரர்களும் பங்கேற்பதாக கூறினார். அதில், அலங்காநல்லூரில் 6099 காளைகளும், பாலமேட்டில் 3677 காளைகளும், அவனியாபுரத்தில் 2400 காளைகளும் பங்கேற்பதாக கூறினார். மேலும் அலங்காநல்லூரில் 1784 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், பாலமேட்டில் 1412 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், அதேபோல் அவனியாபுரத்தில் 1318 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.