மாற்றுத்திறனாளிகளுக்கு கிரகணத்தை உணர்த்தும் கருவி!
ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை மாற்றுத்திறனாளிகள் கேட்டும், தொட்டு பார்த்தும் உணரும் வகையில் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும்.
இந்த நிலையில் கிரகணத்தை பார்வை மாற்றுத் திறனாளிகளும், கேட்கும் திறன் மாற்றுத் திறனாளிகளும் கேட்டும், தொட்டு பார்த்தும் உணரும் வகையில் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஒலி, ஒளி மூலம், கிரகண நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் வார்த்தைகளாக மாற்றி சூரியன் எந்தெந்த நிறத்தில் மாறுகிறது என்று சொல்லிக் கொண்டே வருமாம்.
இந்த கருவியை பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் வானியல் அறிஞரான வாண்டா டியாஸ் மெர்சட் மற்றும் ஹார்வர்டு வானியல் அறிஞர் ஆலிசன் பெரைலா ஆகிய இருவரும் இணைந்து கண்டுபிடித்தனர். இந்தக் கருவி முதல் முறையாக அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு கிரகணத்தின் போது பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அனைத்து கிரகணங்களின் போதும் இந்தக் கருவியின் பயன்பாடு அதிகரித்தது.
அந்த வகையில் அடுத்த வாரம் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 750 கருவிகளை தயாரித்து, அதனை மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வட அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தக் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.