"ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டலம் மூன்றில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த முகாம் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான அளவில் உதவி செய்வதற்கு அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
13 வகையான துறை சார்ந்த அலுவலர்கள் இங்கே மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பங்கள் அதிக அளவில், அடுத்தபடியாக பட்டா கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன.
தொடர்ந்து முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியவர், முதலமைச்சரின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் பெறப்படும் OTP க்கு தடை விதித்தது குறித்த கேள்விக்கு,
"OTPக்கு தடை விதித்தது பின்னடைவு கிடையாது, மக்களை தேடிச் செல்லும்போது மக்கள் முகமலர்ச்சியோடு வரவேற்கின்றனர். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு என்பது ஒரு வெற்றிகரமான திட்டம். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அந்த உத்தரவை மதிக்கக் கூடிய வகையில் நாங்கள் செயல்படுவோம்".
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேர்தலை கருத்தில் கொண்டு நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு,
"கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு தொகுதியிலும் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்களை பெறப்பட்டு பரிசீலனை செய்து அதற்கான தீர்வு கண்டு வருகிறது. இதனுடைய அடுத்த வெர்ஷன் தான் உங்களுடன் ஸ்டாலின். இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை".
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் வைக்க கூடாது என நீதிமன்றம் நாடி உள்ளது குறித்த கேள்விக்கு,
"மக்களை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இதில் பெயர் வைப்பது வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இது அவர்களின் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறது".
பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு:
"இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்".
கட்சியில் சீனியர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர்,
"இது எங்க கட்சி, எங்க கட்சியை பற்றி அவர் கேட்கக் கூடாது, அவர் கட்சியை பற்றி நாங்கள் கேட்க மாட்டோம். இதைக் கேட்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஒட்டுமொத்தமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளம் தலைவராக உதயநிதி உள்ளார் இது குறித்த அவர் பேச வேண்டிய அவசியம் இல்லை".
விலைவாசி பொருட்கள் உயர்வாழ் அடித்தட்டு மக்கள் பாதிப்பு குள்ளாகிர் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து:
"எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையை சீக்கிரமாகவே ஆரம்பித்து விட்டார் எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார், கூட்டம் வந்துவிட்டதால் கூட்டத்திற்கு தகுந்தார் போல் பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார். தேர்தல் பயத்தை கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறார். ஆனால் அது எந்த இடத்திலும் எடுபடவில்லை. ஒவ்வொரு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்து வருகிறார் ஆனால் அவர்கள் அடுத்த நிமிடமே மறுத்து வருகின்றனர்".
இல்லம் தேடி கல்வி குறித்து சீமான் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு,
"கொரோனா காலத்தில் படிக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் இல்லம் தேடி கல்வியானது ஏழை எளிய மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. படித்த இளைய சமுதாயம் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். காசு கொடுத்து டியூசன் அனுப்ப முடிய இயலாதவர்களுக்கும், வேலைக்குச் செல்லக்கூடிய பெற்றோர்களின் குழந்தைகளை கல்விக்காக தத்தெடுக்கும் ஒரு திட்டமாகத்தான் நாங்கள் இதை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.