கிண்டி மேம்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!
சென்னை கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் இன்று நள்ளிரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பால தடுப்புச் சுவற்றில் வேகமாக மோதியதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மற்றொரு இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம்.
இதனால் பைக்குகளில் இருந்து கீழே விழுந்து கை, கால்கள் முறிவது, உயிர் பிரிவது என விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இன்று நள்ளிரவும் போலீசார் வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.