தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!
அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மரியம் மகாலில் செயல்பட்டு வந்த A.R. Motors ன் உரிமையாளர் பாலமுருகன் என்பவர் இரண்டு சக்கர வாகன விற்பனையகத்தை நடத்திக் கொண்டு, மைனர் என்ற விக்னேஷ் மற்றும் விஜி என்ற பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து தீபாவளி பண்டு சீட்டு, பரிசு சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்தார்.
அதில் சுமார் 37 நபர்களிடமிருந்து ரூ 1,41,44,200 வசூலித்து திடீரென்று பண்டு நடத்துவதை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு நித்யானந்தம் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவில் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலமுருகன், மைனர் என்ற விக்னேஷ் மற்றும் விஜி என்ற பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து அரசின் அனுமதி பெறாமல், A.R. Motors என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு, பரிசு சீட்டு ஆகியவற்றை நடத்தி அதில் பொதுமக்களை சேர வைப்பதற்காக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
பிறகு பொதுமக்களை சேர வைத்தும், அவர்கள் நடத்தும் பண்டு சிட்டில் ஆட்களை சேர்த்துவிடுவதற்காக 30 பண்டுகள் சேர்த்துவிடும் நபருக்கு ஒரு பண்டிற்குண்டான பொருட்களோ அல்லது பணமோ இலவசமாக தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியும் ஏமாற்றி உள்ளனர்.
அதன் மூலம் அப்பாவி பொது மக்களை சேர வைத்து, அவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பாலமுருகன் என்பவர் 28.07.2023 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மைனர் என்ற விக்னேஷ், விஜி என்ற பிரகாஷ் ஆகியோர் இன்று (24.11.2023) கைது செய்யப்பட்டனர். சிறப்பான முறையில் புலனாய்வு செய்து எதிரிகளை கண்டறிந்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளர் சம்பத்குமார், பெண் தலைமை காவலர் மல்லிகா மற்றும் காவலர் மணி சங்கர் ஆகியோரை காவல் உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.
அரசின் அனுமதி பொறாமல், போலி வாக்குறுதிகளை அளித்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்யும் இது போன்ற நபர்களை நம்பி தங்களது பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.