"அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அதிசயமாய் உயர்ந்த கொள்கைச் சுடர்" - அண்ணா நினைவு தினத்தை ஒட்டி #EPS பதிவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.
அண்ணா நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், தமிழ்நாட்டின் பல இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணா சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாவின் நினைவு தினம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி,
தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன்,
மேடைதோறும் தமிழ் பொழிந்த
காவிய மேகம்!
இருள்சூழ் தமிழ்வானுக்கு
காஞ்சி வழங்கிய… pic.twitter.com/aGIp0wtXPC— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 3, 2025
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு காஞ்சி வழங்கிய ஒளிவெள்ளி! அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, "நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்" பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.