“உலகமே முடிவுக்கு வந்ததுபோல் உணர்ந்தோம்” - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயிலிருந்து தப்பித்து வந்த தம்பதி கண்ணீர் மல்க பேட்டி!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ஆம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. பலந்த காற்றால் இந்த காட்டுத் தீ மளமளவென அங்குள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் தற்போதுவரை சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் கருகியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 15 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் காட்டுத் தீயில் இருந்து தப்பித்து வந்த தபிதா ட்ரோசன் - காங் தம்பதியினர், தங்கள் விலைமதிப்பற்ற உயிரைத் தற்காத்துக்கொண்டது குறித்துப் பேசியிருந்தனர். இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “சுற்றிலும் தீ சூழ்ந்திருந்தபோது பயமாக இருந்தது. எப்படி தற்காத்துக்கொள்வது என யோசித்தோம். அந்த நேரத்தில் எங்களுடைய வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது. உலகமே முடிவுக்கு வந்ததுபோல் நினைத்தோம்” என கண்ணீர் மல்க பேசியிருந்தனர்.
தொடர்ந்து அங்கு காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 7,500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.