ஹோட்டல் கேஷியரை பீர் பாட்டிலால் குத்திய சக ஊழியர்... சென்னையில் அதிர்ச்சி!
சென்னை ராஜமங்கலம் 200 அடி சாலையில் உள்ள ஹோட்டலில் கடந்த இரண்டு வாரங்களாக கேஷியராக வேலை செய்து வந்தவர் சுகன். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் ஹோட்டலின் அருகே அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்தார். சுகன் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் மது போதையில் சுகனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கு பாதிப்பா?
மேலும், அவர் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சுகனின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதனை சுகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே உணவகத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் சுகனை பீர் பாட்டிலால் குத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் மகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஹோட்டல் கேஷியரை குடிபோதையில் சக ஊழியரே பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.