பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை! உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு!
உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கடந்த 2014, நவம்பா் 4-ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, பாஜக எம்எல்ஏ ராம்துலாா் மீது சிறுமியின் சகோதரா் காவல்துறையில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (மிரட்டுதல்) பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) ராம்துலாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, அவா் எம்எல்ஏ-வாக இல்லை. ஆனால், அவரது மனைவி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தாா். இதனிடையே, ராம்துலாா் எம்எல்ஏவாக தோ்வானதைத் தொடா்ந்து, இவ்வழக்கு சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி இசான் உல்லா கான், ராம்துலாரை குற்றவாளியாக அறிவித்து தீா்ப்பளித்தாா். அவருக்கான தண்டனை விவரம் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா். இதையடுத்து குற்றவாளி ராம்துலாருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரடியாக அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றதால், ராம்துலார் தனது எம்எல்ஏ பதவியை இழக்கிறார். ராம்துலாா், சோன்பத்ரா மாவட்டத்தில் துத்தி(Duddhi) பேரவைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.