For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்

08:09 AM Nov 08, 2023 IST | Web Editor
“கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர் ” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்
Advertisement

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை
ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன்
தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தரப்பில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Advertisement

சனாதனத்தை ஒழிப்பதாக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு
மற்றும் திமுக எம்.பி. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில்
நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்தி முன்னணி அமைப்பின்
நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ - வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்
விசாரணைக்கு வந்தன.

அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், இந்த
வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை
எதிர்மனுதாரராக சேர்த்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை
சமர்ப்பிக்க தந்தி டிவி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும்
தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டார்.

மேலும், சரியான எதிர்மனுதாரரைச் சேர்க்காததால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தள்ளுபடி செய்யத்தக்கது எனவும் தெரிவித்தார். இந்த இரு மனுக்கள் மீதும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை என நீதிபதி
தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் N.ஜோதி, இந்து
மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன்
சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மூத்த வழக்கறிஞர், சனாதனம் என்பதும் இந்து மதம்
என்பதும் ஒன்று தான் எனக் கூறுவதை மறுப்பதாக குறிப்பிட்டார்.

இந்து மதம் பழமையான மதம் தான் என்ற அவர், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், சனாதனத்தை ஏற்கவில்லை என்றார். இந்து மதம் தோன்றிய பிறகே, சனாதன தர்மம் உருவாக்கப்பட்டதாகவும், பரந்து விரிந்த இந்து மதத்தை, சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். தான் ஒரு தீவிர ஐயப்ப பக்தர் என்றும், இந்துவாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், ஒரு போதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது எனவும் சனாதனத்தை விலக்கினால் மட்டுமே இந்து மதத்தை மக்கள் ஏற்பர் எனவும் சேகர்பாபு தரப்பில் வாதிடப்பட்டது.

மனு ஸ்மிருதி அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆரியர்களின் சட்டம், ஆரியர்களுக்கு தான் எனவும்,
தமிழர்களுக்கு அல்ல எனவும் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார். சாதிய நடைமுறைகள் இந்த மாநிலத்தை சீரழித்திருக்கிறது, இந்து ஒருவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் இன்னும் உள்ளது என அடுக்கடுக்காக குற்றம்சாட்டியதுடன், இதை ஒழிக்கவே விரும்புவதாக தெரிவித்தார்.

தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை கவுரவப்படுத்தும் வகையில், அது நடத்திய
சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் சேகர்பாபு
பங்கேற்றதாகவும், பைபிள், குரான் போல மனு ஸ்மிருதி புனித நூல் அல்ல என
விளக்கம் அளித்தார். அரசியல்சாசனத்துக்கு விரோதமான இந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்றும், சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியதுடம், சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்வது, அரசியல் சாசனத்தை மதிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்றது என வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார்.

மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக
அமையும் என்றும், சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்த
படிப்பா என கேள்வி எழுப்பிய வள்ளலாரும் இந்து தான் என குறிப்பிட்டார். நிர்வாகம் மதச்சார்பற்றது என்றும், நிர்வாகமும், மதமும் வெவ்வேறானவை என்றும்
வாதிடப்பட்டது. இதையடுத்து திமுக எம்.பி. ராசா தரப்பு வாதத்துக்காக விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement