உ.பி | தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரின் மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டம் அருகே கரஞ்சப்ரா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சிங் என்பவர், நேற்று பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் மற்றும் அவரின் மகன் தன்னைத் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங், அவரது மகன் பூஷன் சிங் மற்றும் மேலும் 5 பேரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சந்தோஷ் குமார் சிங் அவர்கள் மீது அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், கொலைமுயற்சி, கலவரத்தைத் ஏற்படுத்துதல், தெரிந்தே ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்துதல், அச்சுறுத்தும் வகையில் மிரட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தொகாட்டி பகுதி காவல்நிலைய அதிகாரி தரம்வீர் சிங் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில், சுரேந்திர சிங் 2017ல் சட்டமன்றத் தேர்தலில் பைரியா தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனவர்.