சிறுவன் மீது ஏறி இறங்கிய கார் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ராகவ்குமார் சர்மா (வயது 6). இந்த சிறுவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனுக்கு பின்னால் சிறிது தூரத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த சூழலில், கார் ஓட்டுநர் திடீரென காரை முன்னோக்கி இயக்கினார். அப்போது அந்த கார் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது கார் ஏறி இறங்கியது. இதில் இரு சக்கரங்களுக்கு இடையில் சிக்கி கொண்ட சிறுவன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டான். பின் சக்கரமும் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதனை அறிந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் விபத்தில் சிக்கிய சிறுவன் எழுந்து வீட்டிற்கு ஓடினான். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் நடந்த சம்பவம் குறித்து சிறுவன் ராகவ்குமார் சர்மா பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவன் ராகவ்குமார் சர்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும் அதிகளவில் உள்காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தலை, நெஞ்சு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.