மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பிக்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 46% எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பி-க்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 93% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 46% எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
99 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 93% பேர் கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் சராசரி சொத்தும் ரூ22.93 கோடியாகும். அதே நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களில் சரிபாதி பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது. 46% அதாவது வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 251 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர். வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில், 31%, அதாவது 170 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற வழக்குகள் கடுமையான குற்ற வழக்குகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 4 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் பாஜகவின் 63 பேரும், காங்கிரஸின் 32 பேர் மீதும் இத்தகைய கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.