ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பெத்தூர், கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது விவசாய நிலத்தில் 7 பெண் மயில்கள், 2 ஆண் மயில்கள் என 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் உயிரிழந்த மயில்களின் உடல்களை கைப்பற்றி, விஷம்
வைத்து கொல்லப்பட்டதா? அல்லது தோகைக்காக கொல்லப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், இறந்த மயில்களுக்கு பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயில்கள் தேசிய பறவையாகவும், பாதுகாக்கப்பட்ட உயிரினமாகவும் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.