ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட நிலையில் அனவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் 7 மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் ஏழு பேர் மீதும் மன்னார் மீன்வளத்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆறு மீனவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் ( இந்திய பணம் ரூ.87 ஆயிரம்) அபராதமும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு மீனவருக்கு 50 ஆயிரம் (இந்திய பணம் ரூ.14,500) அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை மீனவர்கள் கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.