”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” - சீமான் ஆவேசம்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா? மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் அம்மாநில மொழி தெரியாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அம்மாநில மக்கள் ஏற்பார்களா? அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா?
தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுமானால், கரூர் உயிரிழப்பு விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்களின் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.