#HemaCommitteeReport | கேரள நடிகைகள் பாலியல் புகார்! ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு!
கேரள திரைத் துறை பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க 7 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தியது.
பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஹேமா கமிஷன் அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உள்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
ஹேமா கமிஷன் அறிக்கையில் தனிப்பட்ட நபர்கள் குறித்து நடிகைகள் நேரடியாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குமூலம் அளித்த நபர்களின் பெயர்களோ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த விவாதத்தில் சிலரது பெயர்கள் வெளிப்பட்டு வருகின்றன.
இதனால் கேரள திரையுலகில் மட்டுமல்லாது அம்மாநில அரசியலிலும் புயல் வீசத்தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் 2019-ஆம் ஆண்டே கேரள சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்காததோடு அறிக்கையையும் கேரள அரசு வெளியிடாமல் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. கேரள காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் எச்.வெங்கடேசன் குழுவின் செயல்பாட்டைக் கண்காணிப்பார் என கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.