6ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரபலங்கள் மிக ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.
6ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும் (மே 25) நடைபெற்று வருகிறது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, 6வத் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்திய குடியரசு தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக டெல்லியில் திரௌபதி முர்மு வாக்களித்துள்ளார்.
நார்த் அவென்யூ பகுதியில் உள்ள CBWC மையத்தில் காலை 9 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தனது குடும்பத்தாருடன் சென்று வாக்கு செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள நிர்மான் பவனுக்கு வருகை தந்து வாக்களித்தனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஹரியானா மாநிலம் சிற்சாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் ஹரியானா மாநில முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தனது குடும்பத்தாருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
கிழக்கு டெல்லி பாஜக எம்பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
டெல்லி பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா தனது வாக்கினை செலுத்தினார். மக்கள் அதிக அளவில் வந்து வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் டெல்லியின் ஏழு தொகுதிகளையும் பாஜக வெல்லும் என்றும் பேட்டியளித்தார்.
பாஜக புது டெல்லி வேட்பாளர் பன்சுரி ஸ்வராஜ் தனது வாக்கை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது குடும்பத்தாருடன் சென்று டெல்லியில் தனது வாக்கினை செலுத்தினார்.