பீகாரில் 65% இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு!
பீகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, அது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.
பீகாரில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பட்டியலினத்தவர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் இரு மசோதாக்களை கடந்த 9-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் நிதீஷ் குமார் தாக்கல் செய்தார். அண்மையில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படியுங்கள்: சென்னையில் தொடரும் மழை: 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!
இந்த மசோதாக்களின்படி, எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு ஒன்றில் இருந்து இரண்டு சதவீதமாகவும், எஸ்.சி. பிரிவினருக்கு 16-இல் இருந்து 20 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இபிசி) பிரிவினருக்கு 18-இல் இருந்து 25 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 15- இல் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மசோதாக்களுக்கும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த 65 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) 10
சதவீத இடஒதுக்கீடும் சேர்த்து பீகாரில் இப்போது இடஒதுக்கீடு 75 சதவீதமாக உள்ளது.