நில அபகரிப்பு வழக்கு தொடர்பான மு.க.அழகிரியின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் அருகில் உள்ள 44 செண்ட் கோவில் நிலத்தை அபகரித்ததாக, மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதே வேளையில் நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவிக்கக்கோரி மு.க.அழகிரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் இருந்து அழகிரியை விடுவித்த மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவிக்க கூறிய மூக்கா அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.