For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!

08:50 PM Nov 07, 2023 IST | Web Editor
பீகாரில் 50  இடஒதுக்கீடு 65  ஆக உயர்த்தப்படும்  முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு
Advertisement

பீகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Advertisement

பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது:

"நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. இருந்தும், சில சாதிகளின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகவும், சில சாதிகளின் மக்கள் தொகை குறைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இது அபத்தம். நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை நாங்கள் கோருகிறோம். அப்போதுதான் ஒவ்வொருவருக்குமான கொள்கைகளை நம்மால் வகுக்க முடியும். பீகார் ஏழ்மை நிறைந்த மாநிலம் என்பதால், இதற்கு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் பிகார் முன்னேறும்.

குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் இருந்தபோது, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதை மனதில் வைத்துத்தான் 2019-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகாரில் நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தபோது நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இது குறித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறியது.

சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பீகாரில் 59.13 சதவீத மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். 40 லட்சம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 63,850 பேருக்கு வீடு இல்லை. அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளன. அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் சில பணிகளை தொடங்க முடியும். பிகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறுகையில், "பீகாரில் கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது. பெண்களின் கல்வி அறிவு ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு தற்போது 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கடந்த 2011ல் இது 918 ஆக இருந்தது. மாதம் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக வரையறுத்துள்ளோம்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement