பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் - பொதுமக்கள் அவதி!
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு போக்குவரத்து கழக
பணிமனையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு
வருகிறது.
மேலும் மதியத்திற்கு மேல், தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நாள்தோறும் 65 பேருந்துகள் மதுரை, திருச்சி, காரைக்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 35 பேருந்துகள் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பரமக்குடி பேருந்து
நிலையத்தில் பொதுமக்கள் காத்திருந்து சிரமம் அடைந்து வருகின்றனர்.