கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது !
நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர் .
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான போலீசார் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட கார் போலீசாரை கண்டதும் தேசிய நெடுஞ்சாலையை விட்டு சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றது.

இதை கண்ட போலீசார் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 50 கிலோ கஞ்சாவை கேரளா மாநிலம் கொச்சினுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாருங்கமகி (வயது 28) என்பதும் தெரியவந்தது. பின்னர் காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சாருங்கமகி மீது வழக்கு பதிவு செய்து ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.