பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி - 5 பேர் கைது... முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!
ஈரோட்டில் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி செய்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள். பெருந்துறை வருவாய் கோட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் இவர், கணவரிடமிருந்து பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கார்த்திகேயன் என்பவர் காவல் துணை கண்காணிப்பாளர் போல நடித்து அறிமுகமாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து ஒருநாள் சுந்தராம்பாளிடம் பேசிய கார்த்திகேயன், “மாமா மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்கு அவர் செல்லவில்லை. அதனால் அந்த வேலையை தங்களது மகனுக்கு வாங்கி தருகிறேன்” என கூறியுள்ளார்.
அதை நம்பிய சுந்தராம்பாள் கொஞ்ச கொஞ்சமாக ரூ.2.30 கோடி வரை கார்த்திகேயனிடம், பல்வேறு நபர்களின் வங்கி கணக்கு மூலமாக கொடுத்துள்ளார். நீண்ட நாள் ஆகியும் வேலை வாங்கித் தராததால் சந்தேகம் அடைந்த சுந்தராம்பாள், கார்த்திகேயனிடம் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். அதற்கு, தன்னை பணம் கேட்டு தொந்தரவு செய்தால், இவ்வளவு பணம் உனக்கு எப்படி வந்தது? என அமலாக்கதுறையிடம் போட்டு கொடுத்து விடுவேன் என்றும், உன் மகனை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சுந்தராம்பாள் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து கார்த்திகேயனின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் டவரை ஆய்வு செய்தனர். உடனடியாக தனிப்படை காவல்துறையினர் சென்னைக்கு சென்று, இதில் தொடர்புள்ள 5 பேரை கைது செய்து பெருந்துறை காவல் நிலையத்திற்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர்.
இதற்கு முன்பாக காவல்துறையினர் தன்னை பிடிக்க நெருங்குவதை அறிந்த கார்த்திகேயன், முன்னதாகவே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் சுந்தராம்பாளின் இந்த பணம் உண்மையில் கடன் வாங்கிய பணமா அல்லது முறைகேடான பணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.