ஒரு மாஸ்க் ரூ.485? எடியூரப்பா மீது ரூ.40,000 கோடி ஊழல் புகார் கூறிய பாஜக எம்எல்ஏ!
கர்நாடகாவில் கொரோனா பேரிடரின் போது, முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாகவும், ஒரு முகக் கவசத்தை ரூ. 485-க்கு கொள்முதல் செய்ததாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் யத்னால் பேசியதாவது:
“கொரோனா காலத்தில் பாஜக அரசு மிகப்பெரிய சூழல் செய்தது. ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசத்தை ரூ.485-க்கு கொள்முதல் செய்தனர். சுமார் 10,000 படுக்கைகளை கொரோனா மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு எடுத்தனர். ஒரு படுக்கையின் வாடகை ரூ.20,000 ஆகும். இந்த தொகைக்கு இரண்டு படுக்கைகளை வாங்கியிருக்கலாம். ஒரு நோயாளியின் மருத்துவச் செலவாக ரூ.10 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மட்டும் எடியூரப்பா தலைமையிலான அரசு ரூ.40,000 கோடி ஊழல் செய்துள்ளது.” என்று தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் பதவியை யத்னா எதிர்பார்த்ததாக கூறப்படும் நிலையில், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்ததால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்ட பதிவில்:
“பாஜக எம்எல்ஏ யத்னாலின் குற்றச்சாட்டே பாஜக அரசுக்கு எதிரான ஆதாரமாகும். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ரூ.4,000 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதைவிட 10 மடங்கு ஊழல் நடந்துள்ளது. யத்னால் போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது.
ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருந்தால், அவர் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கொரோனா ஊழல் குறித்த ஆதாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.