4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : மதுரை தனியார் மழலையர் பள்ளிக்கு சீல்!
மதுரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இப்பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஆருத்ரா எனும் 4 வயது சிறுமி பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
முன்னதாக பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிக்கு பின்புறம் மூடப்படாமல் இருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் குரலை கேட்டு அங்கு வந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த சூழலில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இப்பள்ளியின் தாளாளர் திவ்யா உட்பட 5 பேரை அண்ணா நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அனுமதியின்றி இயங்கிய கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியை வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மூடி சீல் வைத்தனர்.
இதனிடையே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதான் கூறினார்கள். குழந்தை உயிரிழந்ததை கூறவில்லை . பள்ளி தரப்பிலிருந்து தற்போது வரை யாரும் என்னிடம் பேசவில்லை; பார்க்க கூட வரவில்லை என உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.