கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 சரித்திர
பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை தொடர்ந்து தமிழ்நாட்டில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் ரவுடிகளை கட்டுக்குள் வைக்க அவர்களின் இல்லங்களுக்கு சென்று எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க மாவட்டம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவானர்களை பிடித்து வழக்குகளையும் முடித்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தொடர்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி மோதல் வழக்குகளில் தொடர்புடைய தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்ற வாலி (42), தென்தாமரைகுளம் பகுதி சேர்ந்த செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம் (38), ராமன்புதூரை சேர்ந்த சஞ்சய் பிரபு (23), அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (23) ஆகிய நான்கு பேரை கைது செய்து, மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.