நடப்பு ஆண்டில் 38% ஐஐடி மாணவர்கள் வேலையில்லாமல் உள்ளனர் - RTIல் அதிர்ச்சி தகவல்!
நடப்பு ஆண்டில் 38% ஐஐடி மாணவர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என தகவல் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பலருக்கும் ஐஐடி போன்ற நிறுவனங்களில் கல்வி பயில்வது பெரும் கனவாக இருந்து வருகிறது. ஐஐடியில் படிக்க வேண்டும் என பலர் தங்களது மிகத் தீவிரமாக போட்டித்தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். இந்திய அளவில் மிகச் சிறந்த கல்விநிலையங்களாக ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்திய அளவில் உள்ள 23ஐஐடி நிறுவனங்களில் படித்த 38சதவிகிதம் மாணவர்களில் பலர் வேலையில் அமர்த்தப்படவில்லை என்கிற என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர் தீரஜ் சிங் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஐஐடியில் படித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு குறித்த தகவலை பெற்றார். அதில் இந்த ஆண்டு இதுவரை 38% பேர் படித்து முடித்து வேலைக்கு செல்லவில்லை என்கிற தகவல் வெளியானது.
இந்தியா முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் இந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வின் மூலம் வேலைவாய்ப்பில் சேர்க்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 3,400 ஆக இருந்தது. வேலை வாய்ப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1.2 மடங்கு உயர்ந்துள்ளது . அதே நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்பில் இடம்பெறாத மாணவர்களின் எண்ணிக்கையும் 2.3 மடங்கு என இரட்டிப்பாகியுள்ளது,” என தீரஜ்சிங் தெரிவித்துள்ளார்.
ஐஐடி-டெல்லியில் 2023-24 கல்வியாண்டில் படிப்பு முடித்தும் கிட்டத்தட்ட 400 மாணவர்கள் இன்னும் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இதனால் ஐஐடி நிர்வாகம் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக ஐஐடி முன்னாள் மாணவர்களின் உதவியை நாடியும் அவர்கள் மூலம் வேலை வாய்ப்பிற்காக பரிந்துரை செய்ய கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.