போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
“தமிழ்நாட்டில் கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டடம் பகுதியல் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ஒன்று ரூ.823 கோடியில் உருவாக்கப்படும்.
அண்ணாநகர் மேற்கு, கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் மந்தைவெளியில் அமைந்துள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளைத் தரம் உயர்த்தி நவீன வசதிகளுடன் கூடி அலுவலகங்களும் வணிக வளாகங்களும் உருவாக்க விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்” இவ்வாறு அவர் அறிவித்தார்.