பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டியைச் சேர்ந்தவர்
குருவையா. இவர் நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் ரோசன். இவர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா என்பவருடன் சில நாட்களுக்கு முன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
மேலும், ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது அலைபேசி எண்களை ஒருவக்கொருவர் பகிர்ந்து, அலைபேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ரோசனிடம் தன் காதலை உஷா கூறியுள்ளார். அதற்கு ரோசன் மறுப்பு தெரிவித்தார்.
தன்னை காதலிக்க மறுப்பு தெரிவித்த ரோசனை உஷா காதலிக்க வலியுறுத்தியும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தன்னுடைய அலைபேசியிலிருந்து உஷாவினுடைய அலைபேசியின் தொடர்பை ரோசன் பிளாக் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உஷா தனது தோழியான பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் கொங்கப்பட்டியில் சிவஞானம் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் உதவியோடு பூ வியாபாரி குருவையாவிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும், தொகை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் மகன் உஷாவை காதலித்து ஏமாற்றி விட்டாதாக போஸ்டர் அடித்து ஒட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதற்கு பூ வியாபாரி குருவையா மற்றும் அவரது மகன் ரோசன் ஆகியோர் ஒத்துக்
கொள்ளாததால், குருவையாவின் மகன் ரோசன் மற்றும் உஷா இருவரின் புகைப்படத்தை ஒன்றாக இணைத்து சுவரொட்டி தயார் செய்துள்ளனர். அந்த சுவரொட்டியில் பூக்கடை உரிமையாளர் குருபையாவின் மகன் ரோசன் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா என்பவரை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற வாசகத்தோடு அச்சியிட்டிருந்தனர்.
பின்னர், அந்த சுவரொட்டியை நிலக்கோட்டை பூ மார்க்கெட் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பூ வியாபாரியின் சொந்த ஊரான கொங்கபட்டி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
இதனை அடுத்து நிலக்கோட்டை காவல் துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். மேலும், காவல்துறை உதவியோடு சம்பந்தப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த உஷா மற்றும் அவரது தோழி கிருஷ்ணவேணி, அவர்களுக்கு உதவியாக இருந்த சிவஞானம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கொங்கப்பட்டியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது .
அதனை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிலக்கோட்டை காவல்துறையினர் பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சியை சேர்ந்த உஷா கிருஷ்ணவேணி மற்றும் கொங்கப்பட்டியைச் சேர்ந்த சிவஞானம் ஆகியோரை நிலக்கோட்டை நீதித்துவர் துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.