ஆண்டின் முதல்நாளே சிக்கிய 242 பைக்குகள்... இளைஞர்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறை!
சென்னையில் புத்தாண்டு கொண்டாத்தில் ஒரே நாளில் சிக்கிய 242 வாகனங்களை, வழக்குப்பதிவு செய்யாமல் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கி போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் 2025ஆம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணிக்கவும் போலீசார் நேற்றுமுதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 19000 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து நேற்று இரவுமுதல் சென்னையின் முக்கிய இடங்களான வேப்பேரி, எழும்பூர் மெரினா கடற்கரை, அண்ணா சாலை, பட்டினம்பாக்கம் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதுபோதை, அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சாலையில் ரேஸ் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்.
தொடர்ந்து ஆண்டின் முதல் நாள் என்பதால் அனைவருக்கும் அறிவுரை வழங்கி, எச்சரித்து வழக்குப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.