200-க்கு 212 மதிப்பெண்கள் எடுத்த 4-ம் வகுப்பு மாணவி...குஜராத்தில் பரபரப்பு!
குஜராத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹாத் மாவட்டம், கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நடந்த முதன்மைத் தேர்வு முடிவு வெளியானது. இந்த தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவி வன்ஷிபென் மனிஷ்பாய். இவருக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, குஜராத்தி பாடத்தில் 200க்கு 211 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது. வன்ஷபென் தனது மதிப்பெண் சான்றிதழை பெற்றோரிடம் காண்பித்த போது இச்சம்பவம் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அவரின் மதிப்பெண்களை திருத்தி வெளியிட்டது.
இதனையடுத்து, அவருக்கு குஜராத்தியில் 200க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200க்கு 190 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட புதிய ரிசல்ட்டில், மனிஷ்பாய் 1000க்கு 934 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த தவறுக்காண காரணத்தை கண்டறிய இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.