NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!
பாஜக சார்பில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தங்களுடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
- பிரதமர் நரேந்திர மோடி,
- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,
- மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா,
- தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு,
- ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார்,
- சிவ சேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே,
- மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி,
- லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான்,
- பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி,
- ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்,
- என்சிபி மகாராஷ்டிரத் தலைவர் சுனில் தாக்கரே,
- தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் அப்னா தளம் (சோனேலால்) தலைவருமான அனுப்ரியா படேல்,
- ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி,
- ப்ரஃபுல் படேல்,
- ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் ப்ரமோட் போரோ,
- அசாம் அமைச்சர் அடுல் போரா,
- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா இந்திரா ஹாங் சுப்பா,
- AJSU கட்சியின் தலைவர் சுதேஷ் மஹ்டோ,
- ஜனதா தளத்தை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன் சிங்,
- சஞ்சய் ஜா
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.