தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - பெற்றோர்கள் அச்சம்!
மதுரை மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் குமரன் குறுக்குத்தெரு பகுதியில் வசித்து வரும் மைக்கேல், மரிய ஜெனிபர் தம்பதியின் மகள் ஷெர்லின் நிஸி. இந்த நிலையில் ஷெர்லின் நிஸி இன்று காலை அதே பகுதியில் உள்ள ஜெயின்ட்ன் பார்ட்டிரிக் மிடில் ஸ்கூலுக்கு சென்ற போது தெருநாய் விரட்டி கடித்து குதறியுள்ளது.
இதில் சிறுமியின் முகம், கால் உள்ளிட்ட பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியை அழைத்து சென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அதேபோல் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காளீஸ்வரி, முத்துப்பாண்டி தம்பதியின் மகன் யுகேஷ் (8 வயது). இந்த நிலையில் சிறுவன் யுகேஷ் இன்று பள்ளிக்கு சென்ற போது தெருநாய் துரத்தி கடித்ததால் கையில் காயத்துடன் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை தெருநாய் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.