ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி!
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான லீ ஷாங்ஃபு மற்றும் வெய் ஃபெங்கே ஆகியோரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. ஊழலில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லீ ஷாங்ஃபு இரண்டு மாதங்களாக திடீரென மக்கள் கண்ணில் தென்படாமல் மயாமானதை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கேவும் கடந்த மார்ச் திடீரென மாயமாகியுள்ளார்.
வெய் கடந்த 2015-17 வரை ராணுவ படையின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.