ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யத்தால் சென்னையில் சிக்கிய ஹவாலா பணம் ரூ.2.1 கோடி!
ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யமான செயலால் ஹவாலா பணம் 2.1 கோடி ரூபாய் சென்னையில் சிக்கியுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஆட்டோ ஓட்டுநரான இவர் இன்று காலை மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து 3 பேரை ஆட்டோவில் சவாரியாக ஏற்றினார். பிறகு யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஓட்டல் அருகே அழைத்து சென்ற போது 3 பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசி வந்ததால் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சாதுர்யமாக அவர் ஆட்டோவை யானைகவுனி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆட்டோவை வெளியே நிறுத்தி விட்டு சாதுர்யமாக செயல்பட்டு காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனே 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் 2.1 கோடி ரூபாய் 4 பண்டல்களாக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த யாசின், தாவூத், பைசுல்லா என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு நெல்லூரில் இருந்து கார் மூலம் இந்த பணம் வந்துள்ளது. அதனை 3 பேரும் எடப்பாளையத்தில் தத்தா என்பவரிடம் கொடுக்க சென்றது தெரியவந்தது. மேலும் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சாதுர்யமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜை போலீசார் பாராட்டினர்.