ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இளம்தென்றல். இவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி கடலரசி. இவரும் ஒரு மருத்துவராக பணி புரிந்து வந்தார். கடலரசி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மருத்துவர் இளந்தென்றல் தலைமறைவாக இருந்தார். அதனால் கடந்த 2 மாதங்களாக இவரது வீட்டில் யாரும் இல்லை.
இந்த நிலையில் இளந்தென்றல் நேற்று (மார்ச்.04) ஜாமீன் பெற்றதாக தெரிகிறது. இதற்கிடையே, இளந்தென்றலின் தாய், தந்தை இருவரும் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது பூட்டிய வீட்டில் இருந்த 150 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து போலீசாருக்க தகவல் அளித்தனர்.
ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்த மருத்துவர் இளந்தென்றல் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவரின் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. தொடர்ந்து போலீசார் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இளந்தென்றலின் தாய் மற்றும் தந்தை இருவரும் நேற்று (மார்ச்.04) வீடியோ கேமரா உடன் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்றதாகவும், அப்போது இளம் தென்றலின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. போலிசார் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வீட்டின் முன்பு காத்திருந்தனர். யாரும் வராததால் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திரும்பி சென்றனர். மருத்துவர் இளந்தென்றலின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை போனது உண்மையா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.