ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல் - அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. துறை ரீதியான அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது..
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சில திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
- இதன் மூலம் 24700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது
- புதுப்பிக்கதக்க எரிசக்தி பேட்ரி வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- காஞ்சிபுரம் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
- வருகிற ஆக. 17 அன்று சிப்காட் சார்பில் 706.5 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
- காற்றாலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கை மூலம் 25% மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.