“35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்... அதனால் பாஜகவிற்கு டப்பிங் தேவைப்படாது” - முதலமைச்சருக்கு அண்ணாமலை பதில்!
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் டோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“அமெரிக்காவில் மட்டும் 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில் அமெரிக்காவில் 7,50,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. குறிப்பாக ஜனவரி 19ஆம் தேதிக்கு முன்னர் மெக்சிகோ எல்லையில் இருந்து நிறைய பேர் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.
முதலமைச்சர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டை பொருத்தவரை நேரடி நிதி பகிர்வு மூலமாக நிதி வந்து விடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களுமே மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிற திட்டங்கள். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான
வீட்டு திட்டம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி,
போன்று பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம், நிதி பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்திருக்கிறது. 46,000 கோடி ரூபாய் இன்றைய தினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வரவில்லை என்று கூறுகிறார். எல்லா வருடத்திலும் எல்லா மாநிலத்திற்கும் ஸ்பெஷல் ஸ்கீம்ஸ் வராது. 2021-2022 ல் மிகப்பெரிய அளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி, ஒரே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.
போன வருடம் ஆந்திராவுக்கும், இந்த வருடம் பீகாருக்கும் கொடுத்திருக்கிறார்கள். முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களுடைய நிதி அமைச்சரிடம் சொல்லி வெள்ளை அறிக்கை
வெளியிட தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, பாஜக ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது. அதேபோல அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மேடை போட்டு விவாதிப்பதற்கு தயார் என்று கூறினார்.
அதற்கு நாங்களும் தயார் தான். மாநில அரசின் பட்ஜெட்டை நீங்கள்
பேசுங்கள். மத்திய அரசின் பட்ஜெட்டை நாங்கள் பேசுகிறோம். உங்களிடம் தரவுகள் இருந்தால் வெள்ளை அறிக்கை கொண்டு வாருங்கள். எங்களுடைய தரவுகளை நாங்கள் கொண்டு வருகிறோம். யார் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் முதலமைச்சர் எதன் அடிப்படையில் தொடர்ந்து பட்ஜெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.
முதலமைச்சருக்கு தான் இன்றைய தினங்களில் டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாக அறிவாலயத்திலிருந்து பல பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சருக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவது இல்லை. எங்கும் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. அமெரிக்க அதிபர்
டிரம்ப் கூறுகிறார் என்னைவிட ஒரு சிறந்த, trade negotiator மோடி என்று.
இதையெல்லாம் முதலமைச்சர் கேட்க வேண்டும்.
உலக அளவில் இந்தியாவின் அங்கீகாரம் என்ன, மோடிக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் என்ன என்பதை அவர் பார்க்க வேண்டும். 27 ஆண்டுகள்
கழித்து டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைந்து விட்டது என்று பேசுகிறார் தமிழ்நாட்டின் முதல்வர். அதன் பிறகு ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் செய்வதற்கு சந்தானம் தேவைப்படுகிறார். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள் அதுவும் அதிமுகவிலிருந்து, இறக்குமதி செய்கிறார்கள். 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள். அதனால் டப்பிங் எங்களுக்கு தேவைப்படவில்லை. அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள்தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.
CAG audit-க்கு இந்து அறநிலையத் துறையினர், ஆவணம் சமர்பிப்பதே இல்லை. அவர்களுக்கே தெரியும் அங்கு அவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது. பசுவை கொடுத்தால் அங்கு பசுவை காணவில்லை. கோயிலில் இருக்கும் தங்கத்தின் கணக்கு தெரியாது. கோயில் கொடுக்கும் பணத்திற்கும், கோயிலுக்கு செலவு செய்யப்படும் பணத்திற்கும் எந்தவிதமான கணக்கும் இல்லை. மருதமலை கோயிலில் தைப்பூசத்தன்று, எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று பார்த்தோம்.
தமிழகத்தில் ஒரு உதவாதத்துறை இருக்கிறது என்றால், மக்களுக்கு உபத்திரவம் கொடுக்கக்கூடிய ஒரு துறை இருக்கிறது என்றால், அது இந்து அறநிலையத்துறை தான். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை அறநிலையத்துறையை அகற்றுவது தான். முதலமைச்சரினால் ஒரு ஏர் ஷோ ஒழுங்காக நடத்த முடியவில்லை. முதலமைச்சர் மணிப்பூர் அரசியல் பற்றி பேசுகிறார். மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் குற்றம் என்ன? உயர் நீதிமன்றம் அங்கு ஒரு சமுதாய மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கொடுக்கிறார்கள்.
அங்கு இரண்டு சமுதாயத்தினருக்கு பிரச்சனை. அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை ஏன் அவர் பேசுவது இல்லை?. நேற்று ADG சட்டம் ஒழுங்கு குறித்து, சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறார். குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அவர் ஒற்றுக்கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் இதை ஒற்றுக் கொள்ள மறுக்கிறார்.
நான்கு வருடம் தூங்கிவிட்டு தேர்தல் வருகிறது என்பதற்காக, சீனியர் ஆபிஸர் வீட்டில் இருக்கும் பெண் காவலரை தற்போது ஸ்டேஷனுக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார். சிறப்பு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை. அண்ணாப் பல்கலைக்கழக பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை எதுவும் தெரியவில்லை. முதலமைச்சர் பகல் கனவில் இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை தாண்டி வெளியில் இருக்கும் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை” எனப் பேசினார்.