பச்சிளம் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி - கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்து - அக்காம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் (4 மாதங்களுக்கு முன்பு) பெண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில், நேற்று முன்தினம் (மார்ச் 17) இரவு 11.30 மணியளவில் அவர்களின் 4 மாத பெண் குழந்தை மாயமானது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை தேடினர்.
அப்போது அருகிலிருந்த கிணற்றில் இருந்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து, குழந்தையை அருகில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வீட்டில் இருந்த 12 வயது சிறுமி முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு 12 வயது சிறுமி, குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் குழந்தையை கொலை செய்த 12 வயது சிறுமி முத்துவின் (உயிரிழந்த குழந்தையின் தந்தை) சகோதரியின் மகள் என்பது தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில் இவரின் தாயும் விட்டுச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து, 12 வயது சிறுமியையும், அவரது தங்கையும் முத்து வளர்த்து வந்துள்ளார். முத்துவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சூழலில் முன்பு மாதிரி பாசமும் அன்பும் கிடைக்காது என்று எண்ணியதால் அந்த குழந்தையை கொலை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.