பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!
2024 பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காததற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000/-ஐ வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : 33வது சியோல் மியூசிக் அவார்ட்ஸ் - BTS, BLACKPINK-க்கு விருது...!
மேலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கரும்புக்கான பணம் இடைத் தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.