“1000 உழவர் நல சேவை மையங்கள்” - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கோடை உழவு, மலைவாழ் உழவர்களுக்கான நலத்திட்டங்கள்;
1. 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.42 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் வழங்கப்படும்.
2. டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றிற்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3. 3 லட்சம் ஏக்கர் பரப்பில் கோடை உழவு செய்திட ஹெக்டருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.24 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
4. 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெற சிறுதானிய சாகுபடி, இடுபொருள் விநியோகம், வேளாண் இயந்திரங்கள் மதிப்பு கூட்டுதல் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட ரூ. 22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5. இத்திட்டம் திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 20 மாவட்டகளில் செயல்படுத்தப்படும்.