ஆட்டோ ஓட்டுநர் மீது சரமாரித் தாக்குதல் - 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப். 14) இரவு 12 மணியளவில் தேவராஜ், கோகுல்ராம், ராம்லெட்சுமணன் என 3 பேர் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் காளைப்பாண்டி (50) என்ற ஆட்டோ ஓட்டுநர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்கள் 3 பேர் ஆட்டோவை நிறுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை கூறி ஆட்டோவில் ஏறி அங்கியிருந்து புறப்பட்டனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் மது பாட்டில் பிளாக்கில் கிடைக்குமா எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுநரும் அவர்களை அழைத்துச் சென்று மது பாட்டிலை வாங்கிக் கொடுத்துள்ளார். பின் அவர்கள் மது அருந்த ஒதுக்குப்புறமாக ஒரு இடம் தேடியுள்ளனர். அப்போது அவர்களை அத்தை கொண்டான் சுடுகாட்டிற்கு ஓட்டுனர் காளைப்பாண்டி அழைத்துச் சென்றார்.
பிறகு அவர்கள் 4 பேரும் மது அருந்திக் கொண்டிருந்த போது வாய் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது பயணிகள் 3 பேர் அவரை கைகளாலும், கற்களாலும் சரமாறியாக தாக்கியுள்ளனர். அதில் ஆட்டோ ஓட்டுனரின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. அதை கண்டு அவர்கள் ஓட்டுநர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து ஆட்டோவை எடுத்து சென்றுள்ளனர். போதையில் ஆட்டோவை ஓட்ட முடியாததால் நாலாட்டின்புத்தூர் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கியுள்ளனர்.
பிறகு போதை தெளிந்ததும் ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு பேருந்தில் ஏறி தூத்துக்குடி சென்றனர். அப்போது பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ஒருவர் அவர்கள் சட்டையில் ரத்த கரையை கண்டு அவர்களை விசாரித்த போது அவர்கள் நடந்த உண்மையை கூறியுள்ளனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட இடத்தில் அவரைக் கண்ட பொதுமக்கள் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.