#ZIMvsIND - 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிளெஸிங் முசரபானி, வெலிங்டன் பெட்ஸிசாய் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்வே 18.4 ஓவரிலேயே ஆல் அவுட் ஆனது. இதனால் 134 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவேரே 43 ரன்கள் எடுத்தார். இந்திய சார்பில் முகேஷ் குமார், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவி பிஷோனி 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.