பிளாஸ்டிக் கழிவுகளே இல்லாத ’ஜீரோ வேஸ்ட் திருமணம்’ - இணையத்தில் வைரல்!
பெண் மருத்துவரின் பிளாஸ்டிக் கழிவுகளே இல்லாத ’ஜீரோ வேஸ்ட் திருமணம்’ குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான். விதமான விதமான அலங்காரங்கள், வண்ண தோரணங்கள், பிரம்மாண்டமான பந்தல்கள் , மணமேடை, சீரியல் பல்புகள், வித்தியாசமான பிளக்ஸ் போர்டுகள் என திருமணத்தில் இவை இல்லாமல் நடந்தால் ஆச்சர்யம்தான்.
திருமணத்திற்கான நாள் குறிப்பது முதல் கல்யாண பத்திரிக்கை, திருமணத்திற்கான அழைப்பு, நலங்கு, திருமணம் மற்றும் விருந்து என பாரம்பரியமாக கடைபிடித்த விஷயங்கள் காலத்திற்கு ஏற்ப தற்போது மாற்றம் பெற்றுள்ளன. தற்போது நடைபெறும் திருமணங்களில் ஒரு மொபைல் அப்டேட் வருவதுபோல தினந்தோறும் புதிய அப்டேட்கள் வரத் துவங்கிவிட்டன.
அதன்படி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் என சர்பிரைஸ் வெட்டிங், ட்ரோன் கேமராவில் படம்பிடித்தல், விளையாட்டுகள் என இவற்றை செய்வதற்கென்றே புதிதாக நிறைய நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. பணம் பெற்றுக் கொண்டு அவற்றை மிக நேர்த்தியாக செய்து கொடுக்கின்றன.
தற்போதைய இணைய உலகில் “ஃபேண்டஸி வெட்டிங்” என்கிற சொல் புழக்கத்தில் இருக்கிறது. திருமணத்தை ஒரு சடங்காக கருதிய நிலையில் அதனை ஒரு ஃபேண்டஸியாக தற்போதைய இளைய தலைமுறை மாற்றியுள்ளது. ஆனால் இப்படியாக நடைபெறும் பிரம்மாண்ட திருமணங்கள் அங்கே போடப்படும் பந்தல் முதல் பறிமாறப்படும் உணவு வரை நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் இடம்பெற்றிருக்கும். இதன் பின்னர் இந்த கழிவுகளை அகற்றுவதுவதான் தூய்மை பணியாளர்களுக்கு மிகப் பெரிய சிக்கல்.
இந்தநிலையில் பெண் மருத்துவர் பூரி பட் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ”தனது திருமணம் பூஜ்ஜிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் நடைபெற்றுள்ளது. திருமண மேடையை நாங்கள் கரும்பால் வடிவமைத்தோம். இதன் மூலம் திருமணம் முடிந்த பிறகு அதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தோம்.
இதேபோல திருமணத்தில் பறிமாறப்பட்ட உணவின்போதும் வாழை இலை மற்றுல் எவர் சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் பறிமாறப்பட்டது. மேலும் திருமணத்திற்கு வந்திருந்த மக்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களும் நூலால் நெய்யப்பட்ட கைப்பையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூஜ்ஜிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் எங்களது திருமணம் நடைபெற்றது” என மருத்துவர் பூரி பட் தெரிவித்துள்ளார்.