கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்... ஒரே வாரத்தில் 12 பேர் கைது - 48 கிலோ கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி
வைக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இனாம் மணியாச்சி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் இளம் சிறார் உள்பட மூன்று பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கயத்தாறு பணிக்கர்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (21), நெல்லை தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 27 ந்தேதி கிழக்கு காவல் நிலைய போலீசார் அருண்குமார் உள்ளிட்ட நான்கு
பேரை கைது செய்து 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் இருந்து மொத்தமாக கொண்டு வரப்பட்ட கஞ்சாவை அருண்குமார் மூன்று டீமாக பிரித்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகவும், அந்த மூன்று பிரிவுகளை சேர்ந்தவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு பகுதியில் பதிக்க வைத்திருந்த கஞ்சாவை கொண்டு வந்து கோவில்பட்டி பகுதியில் விற்பனை செய்ய வந்தபோதுதான் இந்த கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 48 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு இளம் சிறார், இளம் வயது கல்லூரி மாணவர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.