கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்: ரூ.86,000 அபராதம்!
கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தின் மட்டூல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் 2 பேரை ஏற்றிக் கொண்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றது செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவானது. ஏற்கனவே இதே இளைஞர் பலமுறை விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அவரது கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு, வீட்டுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது தெரியவந்தது. மொத்தம் 155 முறை விதிமீறலில் ஈடுபட்ட அவரது வீட்டுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதித்தனர். மேலும், இளைஞரின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு முடக்கப்பட்டதோடு, இருசக்கர வாகனத்தையும் தற்காலிகமாக பறிமுதல் செய்தனர்.
அபராதத் தொகையை செலுத்திய பிறகு அவரது இருசக்கர வாகனம் திருப்பி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது மோட்டார் சைக்கிளை விற்றால் கூட அவ்வளவு தொகை கிடைக்காது என்று இளைஞர் மன்றாடியபோதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் தாங்கள் எதுவும் செய்ய இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
சாலை பாதுகாப்பு விதிகளை உறுதி செய்வதில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் திறனுக்கு இச்சம்பவம் உதாரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.