விருதுநகர் | டாட்டா ஏசி வாகனத்தை திருடிய மூவர் கைது!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நான்கு வழிச்சாலை அருகே லிங்கச்சாமி என்பவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வைத்துள்ளார். இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டாட்டா ஏசி வாகனம் மூலம் கிராமங்களில் விநியோகம் செய்து வந்தார். இந்த சூழலில், கடந்த 18ம் தேதி அவரது குடிநீர் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனம் காணாமல் போனது.
உடனே லிங்கச்சாமி காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் சமீளாபேகம் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் பகுதியில் காணாமல் போன டாடா ஏசி வாகனம் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் டாட்டா ஏசி வாகனத்தை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசார் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர். தொடர் விசாரணையில் அவர்கள், பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (24), அருண் பாண்டியன் (23) மற்றம் பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) என்று தெரியவந்தது.
பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிங்கச்சாமியின் மினரல் வாட்டர் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்தார். திடீரென்று வேலையை விட்டு நின்ற அஜய் ஒரு விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தார்.
அவரது நண்பர்களான அருண் பாண்டியன் (23), சக்திமுருகன் (24) ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து டாடா ஏசியை திருடியது தெரியவந்தது. அதனை உடைத்து
விற்பனை செய்து விலை உயர்ந்த டூவீலர்கள் வாங்கலாம் என எண்ணி திருட்டில்
ஈடுபட்டதும் தெரியவந்தது. இச்சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.